பாதாள சாக்கடை பணிகளால் இருவழிப் பாதையாக மாறிய சாலைகள் - திணறும் நாகர்கோவில் மாநகரம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் 2013-ம் ஆண்டு துவங்கிய பாதாள சாக்கடை பணிகள் 11 ஆண்டை கடந்த பின்னரும் இன்னமும் முடியவில்லை. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாறு - பார்வதிபுரம் (கே.பி.ரோடு) ரோட்டில் தற்போது பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. குறி்பபாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை ஒருவழிப் பாதையில் பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால், சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பு வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலக சந்திப்பில் இருந்து கோட்டாறு செல்லும் வாகனங்கள் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லாமல், நேரடியாகவே கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பிற்கு செல்லும் வகையில் இன்று முதல் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக செட்டிகுளம் சந்திப்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் கணேசபுரம் சந்திப்பில் இருந்தும் செட்டிகுளத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் சந்திப்பிலும் பாதாள சாக்கடை பணி இன்னும் இரு நாட்களில் துவங்க உள்ளதால் மேலும் போக்குவரத்து மாற்றப்படவுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

அதன்படி, செட்டிகுளம் சந்திப்பிற்கு வரும் வாகனங்களை ஆட்சியர் அலுவலக சந்திப்பில் இருந்து பள்ளி சந்திப்பு, நீதிமன்ற சாலை, பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக சுற்றிவிட திட்டமிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்னர் நாகர்கோவில் மாநகரில் இருவழிப் பாதை முறை சீராகும். தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் நாகர்கோவில் மாநகர மக்கள் திணறி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை தாமதமின்றி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE