இந்தியாவில் இனி மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கம்மத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சந்திரசேகர் ராவ் பேசினார். அப்போது அவர், "பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெலங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை. பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெலங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது. எனது உயிர் உள்ளவரை தெலங்கானா மதசார்பற்ற கொள்கை அடிப்படையிலான மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்.
காங்கிரஸும் பாஜகவும் ஒரே துணியில் இருந்து வெட்டப்பட்டவை. அவர்கள் எப்போதாவது தெலங்கானா கொடியை உயர்த்தினார்களா? தெலங்கானா போராட்டத்தை அவர்கள் தோளில் சுமந்தார்களா? நாங்கள் போராடும் போதெல்லாம் எங்களை அவமதித்து, துப்பாக்கியால் சுட்டு, சிறையில் அடைத்தனர். அவர்கள் இப்போது ஏன் இந்த மாநிலத்தின் மீது அன்பு காட்டுகிறார்கள்.
இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவர்களின் முதலாளிகளால் கட்டளையிடப்படுகிறார்கள். டெல்லியின் இந்த அடிமைகளுக்கு கீழ் இருந்து நாமும் அடிமைகளாக மாற வேண்டுமா?. காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் கம்மம் மக்கள் அவதிப்பட்டனர். இருப்பினும், இந்த மக்கள் தற்போது தடையில்லா மின்சாரம் மற்றும் போதுமான குடிநீரைப் பெறுகின்றனர்.
பிஆர்எஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தெலங்கானாவில் ஆட்சி அமைத்த பிறகு, சீதா ராமர் லிப்ட் பாசனத் திட்டத்தை (எஸ்ஆர்எல்ஐபி) துவக்கி வைப்பேன். காங்கிரஸ் தனது ஆட்சியின் போது சிறுபான்மையினருக்காக "ரூ 900 கோடி மட்டுமே" செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் பிஆர்எஸ் அரசாங்கம் ஏற்கனவே 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளது” என்று அவர் கூறினார்
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி 2 வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் இந்த ஆட்சிகாலம் நிறைவடைய உள்ள நிலையில், 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இம்முறை பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!
விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்
புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்