மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரானார் திருமாவளவன்!

By KU BUREAU

மயிலாடுதுறை: 2003ம் ஆண்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று ஆஜரானார்.

மயிலாடுதுறையில் 2003-ல் நடந்த விசிக பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருமாவளவன் ஆஜரானதை அடுத்து இந்த வழக்கை செப்.11ம் தேதிக்கு நீதிபதி விஜயகுமாரி ஒத்திவைத்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 2002ம் ஆண்டு கட்டாய மத மற்ற தடைச் சட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்தது. இதனை கண்டித்து கட்டாய மதமாற்ற சட்ட மசோதாவை வாபஸ்பெற கோரியும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. 2003ம் ஆண்டு மயிலாடுதுறையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது. இதனால் போலீசாருக்கும், விசிக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் இந்த மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடா்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த கலவரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு எதிராக கடந்த மாதம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE