ஏற்காட்டில் 5 நாள் கோடை விழா, மலர்க்காட்சி தொடங்கியது: குவியும் சுற்றுலாப் பயணிகள்

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஏற்காட்டில் 5 நாள் கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நேற்று தொடங்கியது. கோடை விழாவில், மலர்களால் உருவாக்கப்பட்ட காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களின் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திழுத்து வருகிறது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா மற்றும் மலர்க்காட்சி ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வரும் 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோட்டக்கலைத் துறை சார்பில் 7 லட்சம் மலர்களைக் கொண்டு, மலர்ச்சிற்பங்கள், வண்ண மலர்த் தொட்டிகள் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஏற்காடு அண்ணா பூங்காவில், இயற்கை மின்சாரத்தை உற்பத்தியை விளக்கும் பிரம்மாண்டமான காற்றாலை, முத்துச் சிப்பி, நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, மீன் போன்றவை, மலர்ச்சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மவுஸ், டாம் அன்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், டோரா புஜ்ஜி ஆகியவை மலர்ச்சிற்பங்களாக வடிவகைப்பட்டு, அண்ணா பூங்காவில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

மலர்ச்சிற்பங்கள் அருகே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடனும், ஜோடிகளாவும் நின்று போட்டோ, செல்ஃபி எடுத்து, தங்கள் நினைவுகளை பதிவு செய்து மகிழ்ந்தனர். இதனிடையே, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பூங்காவில், மலர்த் தோரணங்கள், மலர்களால் ஆன செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தாவரவியல் பூங்கா, ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய இடங்களிலும் மலர்ச்சிற்பங்கள், மலர் அலங்காரத் தோரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பூங்கா வளாகத்தில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அந்த ரகங்களை சுற்றுலாப் பயணிகள் சுவைத்து, தேவைக்கேற்ப அவற்றை வாங்கி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தில், ஓவியங்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் இரவில் ஜொலிக்கும் வகையில், மரங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலா பயணிகளைக் கவர, கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்திருந்த நிலையில், ஏற்காட்டில் இன்று வறண்ட வானிலை நிலவி, குளிர்ந்த காற்று வீசியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஏற்காடு கோடை விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஏற்காட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பார்க்கிங் வசதி, காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செல்போன் எண்கள், நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் QR code-ல் உள்ளடக்கி பிரசுரம் அச்சிடப்பட்டு அவை, ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியில் மாவட்ட நிர்வாகத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE