தேர்தல் பத்திரங்கள் ரத்து... பிரதமர் மோடியை பதவி விலகச் சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி!

By காமதேனு

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விராட் இந்துஸ்தான் சங்கத்தின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள், எஸ்பிஐ வங்கிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.

தனிநபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகவும் வழங்க முடியும். ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனிநபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ, நன்கொடையாக பெரும் அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கப்படாது. இருப்பினும் அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி, இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இன்று இது தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது எனவும் வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19 (1) ஆகியவற்றை மீறும் வகையில் இந்த திட்டம் உள்ளதாகவும், கருப்புப் பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிக்கிறோம் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்திற்கு வழிவகுக்கும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பொது மக்களுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து விராட் இந்துஸ்தான் சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ‘அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அரசு பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக கண்டறிந்ததை சுட்டிக்காட்டி ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் உருவாக்கிய ஜனதா கட்சியிலிருந்து உருவான பாரதிய ஜனதா கட்சி, ஜெயபிரகாஷின் அடிகளை பின்பற்றுமா? தேர்தல் பத்திரங்கள் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அபத்தமான திட்டம். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிய பாஜகவின் மிகப்பெரிய ஊழல் இது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் மோடிக்கு எதிரான இந்த ஆவேசப் பதிவு பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை... தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்... கைவிட்டு போனது ‘விவசாயி சின்னம்’!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE