தொட்டபெட்டா சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி @ நீலகிரி

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் ஃபாஸ்ட் டேக் சோதனைச் சாவடி மாற்றியமைக்கப்படும் பணிகள் நடந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரம் செல்ல நாளை (மே 23) முதல் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சம் பேரும் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர்.

தற்போது கோடை சீசன் முடிந்தும், பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ள போதும் சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பொதுவாக உதகையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர திட்டமிட்டு சுற்றுலா செல்வார்கள்.

ஆனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு செல்லும்போது வாகன கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி அனைத்து சுற்றுலாதலங்களுக்கும் அவர்களால் போக முடிவது இல்லை. இதனால், கூடுதலாக உதகையில் ஒரு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனை சாவடியில் ‘ஃபாஸ்ட் டேக்’ மின்னனு பரிவர்த்தனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஃபாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடக்கவுள்ளதால் தொட்டபெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொட்டபெட்டாவில் நடைபெற்று வரும் ஃபாஸ்ட் டேக் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று நாளை (மே 23) முதல் தொட்டபெட்டா சாலை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE