கும்பகோணம்: நீதிமன்ற தீர்ப்புகளை உடனே அமல்படுத்த வலியுறுத்தி கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 205 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு கும்பகோணம் கிளைத் தலைவர் ஆர்.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கும்பகோணம் கோட்டத் தலைவர் எஸ்.கென்னடி முன்னிலை வகித்தார்.
105 மாத பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும், 2022 டிசம்பர் முதல் ஓய்வுபெற்றோரின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த முறைப் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும், இதர துறைகளைப் போல் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மினி பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை உடனே அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு பலன்களை ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 205 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.