சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மதகுபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், கல்லல் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஸ்ரீ பூங்குன்ற அய்யனார் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டும், கல்லல் வெற்றியூர் நாவல்கனியான் மடம் கிராம ஸ்ரீசுப்ரமணி வள்ளி தேவசேனா கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டும் வைகாசி மாதத்தில் நடத்தப்படும். இந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதனால் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறும் கிராமங்களின் பட்டியலில் எங்கள் கிராமங்களில் பெயர்களை சேர்த்து ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மதகுபட்டியில் மே 31-ம் தேதி ஜல்லிக்கட்டும், ஸ்ரீசுப்ரமணி வள்ளி தேவசேனா கோயில் விழாவில் நாளை (மே 23) மஞ்சுவிரட்டும் நடத்த அனுமதி வழங்கவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் பட்டியலில் எங்கள் கிராமங்களின் பெயரை சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்’ என கோரி இருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் மஞ்சுளா, குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். கிராமங்களின் பெயர்களை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE