சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, புழல் சிறையில் தவிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 முறை நீட்டித்துள்ளது. கடந்த 5 மாத காலமாக புழல் சிறையில் அவதிப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது ஜாமின் கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நவம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை ஜாமீன் கிடைத்து விடும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் செந்தில் பாலாஜி தரப்பினர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அப்போதே புகார் எழுந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 13ம்தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 14ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். சுமார் ஐந்து மாத காலம் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. அவர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற உள்ளது.