சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அவை வழக்குகளில் தொடர்புடைய வானங்களா என்பதை கண்டறிய மாநகர காவல்துறை உதவியை கோரியுள்ளது.
சென்னை மாநகரின் பல பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு இடையூறு ஏற்பட்டாலும், மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து காவல் துறையும் கண்டுகொள்வதில்லை என புகார் இருந்து வருகிறது.
கடந்த 2018 காலகட்டத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவியது. அப்போது இதுபோன்ற சாலையோர கேட்பாரற்ற பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அப்போதைய மாநகராட்சி ஆணையராக இருந்த தா.கார்த்திகேயன் எடுத்தநடவடிக்கை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன.
» ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி: ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
அதன்மூலம் கிடைத்த தொகை மாநகரின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் சாலையோரங்களில் பழைய வாகனங்கள் நிறுத்துவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், இதுபோன்ற வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாநகராட்சி மன்றத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கேட்பாரற்று கிடக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம்விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதற்கு தடையில்லா சான்று வழங்குமாறு மாநகர காவல்துறையிடம் கோரியுள்ளது. மாநகர காவல் துறையும், இந்த வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடையவையா என ஆய்வு செய்து வருகிறது. இப்பணிகள் முடிவடைய ஓரிரு மாதங்கள் ஆகும். அதன் பின்னரே வாகனங்களை ஏலம் விடநடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.