மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நேற்று காலை நடிகை நமீதா, தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். அப்போது பாதுகாப்பு கருதியும் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்கும் சில விவரங்களை ஊழியர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்ற அவர், சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில் அவர்கூறியிருப்பதாவது:
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக எனது கணவருடன் காலையில் சென்றேன்.அப்போது, எங்களுக்கு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. என்னையும், கணவரையும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என கோயில் பெண் அலுவலர் உள்ளிட்ட ஊழியர்கள் கேட்டனர்.
நான் திருப்பதி கோயில் உள்ளிட்ட நிறைய கோயிலுக்குச் சென்றுவந்துள்ளேன். யாரும் இதுபோல கேட்டது இல்லை. நமீதா யார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனது குழந்தைக்குக்கூட கிருஷ்ணா என்றுதான் பெயர் வைத்துள்ளேன். கோயில் ஊழியர்களுக்கு யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை. இதுபற்றி உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
» நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? காலம்தான் தீர்மானிக்கும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து
இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘பொதுவாக முகக்கவசம் அணிந்து வருவோரிடம் விவரம் கேட்பது நடைமுறை. முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வந்த நடிகை நமீதாவிடம் விவரம்கேட்கப்பட்டது. வேறு ஒன்றுமில்லை. அவர் நடிகை நமீதா என்று முன்கூட்டியே எங்களுக்குத் தெரியாது’’ என்று கூறினர்.