கோயில் விழாவின் தேரோட்டத்தை தொடங்கிவைத்து எஸ்.பி.வேலுமணி நடனமாடி ஊர்வலம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மைல்கல் பகுதியில் இன்று (மே 22) கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பக்தர்களுடன் இணைந்து நடனமாடினார்.

கோவை குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் பழமை வாய்ந்த சக்தி மிக்க அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்ரீ சக்தி கரகம் மற்றும் ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று (மே 22) நடந்தது.

இந்த விழாவில முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை தொடங்கி வைத்தார். பின்னர், ஜமாப் இசைக்கு ஏற்ப அங்கு திரண்டிருந்த பக்தர்களுடன் உற்சாக நடனமாடி ஊர்வலத்துடன் இணைந்து அவர் நடந்து சென்றார்.

இத்திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு மற்றும் பாலக்காடு பிரதான சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும், இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூச்சட்டிகள் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செய்தனர். இளைஞர்களின் சிலம்பாட்டம், வாணவேடிக்கை என்று திருவிழா களைகட்டி வருவதால் கோவை சுகுணாபுரம் பகுதி முழுவதும் இன்று விழாகோலம் பூண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE