“ஸ்ரீமான் சீமான்ஜி வாங்க வாங்க..!” நாதக தலைவரை வரவேற்கும் எச்.ராஜா

By சானா

கலகலப்பாக இருந்தது கமலாலயம். கொள்கை அளவில் கொஞ்சமே கொஞ்சம் (!) மாறுபட்டிருந்தாலும் அவ்வப்போது வார்த்தைப் போரில் ஈடுபட்டு பரஸ்பரம் பகைமை பாராட்டிவந்த தம்பிகளும் தாமரைக் கட்சித் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் அன்புடன் தழுவிக்கொண்டு அரசியல் நாகரிகம் பேணிக்கொண்டிருந்தனர்.

இரு தரப்பிலும் இன்னும் கோபம் தணியாத ஒரு சிலர் தத்தமது குழாமுக்குள் குசுகுசுவெனப் பேசிக்கொண்டிருந்தனர். ‘கொண்டுவரப்பட்ட’ அண்டாவில் காளான் பிரியாணி சுடச்சுடக் காத்திருந்தது. வாசல் மேல் விழி வைத்துக் காத்திருந்த எச்.ராஜா, மீசையையும் மீறிப் படர்ந்த புன்னகையுடன் உள்ளே நுழைந்த சீமானைப் பார்த்ததும், அண்ணாமலையை அருகில் சென்று பார்த்த ‘ஆருத்ரா’ புகழ் ஆர்.கே.சுரேஷ் கணக்காக ஆனந்தப்பட்டார்.

“ஸ்ரீமான் சீமான்ஜி வாங்க வாங்க... லண்டன்ல இருந்து அண்ணாமலை திரும்பி வந்ததைவிட, கொண்ட கொள்கையை உதறிட்டு நீங்க வந்திருக்கீங்க பாருங்க… அதுதான் ரொம்ப சந்தோஷம்” என்று இன்முகம் காட்டி வரவேற்றார் எச்.ராஜா.

“அய்யா கோல்வல்கரோட கொள்கைகளைக் கொள்கை அளவுல எதிர்க்கிற ஆளு நான். ஆனா, எங்க அய்யா (!) மு.க.ஸ்டாலினோட திராவிட மாடல் அரசு தினப்படி போடுற டிராமாவைத் தாங்க முடியாமத்தான் உங்களைப் பார்க்கலாம்னு ஓடோடி வந்திருக்கேன். அதுவும் எங்க அய்யன் செந்தில் பாலாஜி போடுற சீன் இருக்கே...” என்று சிரித்த முகம் காட்டினார் சீமான்.

இதற்கிடையே பாஜக தரப்பு அதிருப்தி கோஷ்டியில் ஒருவர், “ம்க்கும்... இதெல்லாம் என்ன காம்பினேஷனோ? ராஜா ஜியைப் பார்த்து ‘உனக்கென்னப்பா’ டயலாக்கெல்லாம் விட்ட சீமானைச் சிரிச்சிக்கிட்டே எப்படி சகிச்சிக்கிறது? சங்கட்டமா இருக்குங்க ஜி” என்று சலித்துக்கொண்டார். அருகில் இருந்த இன்னொருவர், “தன்னோட நிலைப்பாட்டை சீமான் மாத்திக்கணும்னு ராஜா ஜி சொன்னாரு. சீமான் மாசத்துக்கு ஒரு தடவை அதை மாத்திக்கிட்டுத்தானே இருக்காரு?” என்று அங்கலாய்த்தார்.

இன்னொருவரோ, “அட ஒரு காலத்துல மோடி ஜிக்கு ஆதரவா முழுமூச்சா பிரச்சாரமே பண்ணினவர்ப்பா சீமான். கோடிகள்ல ஓடிட்டு இருக்கிற அரசியல் களத்துல கொள்கைகள்லாம் ஒரு மேட்டரா? மூணாம் கலைஞர்னு ஒருத்தரைச் சொல்லிட்டு இருக்காங்க... அவர் டிஸ்ட்ரிபியூஷன்ல இருக்கிற ஞானம்கூட ரிசர்வேஷன்ல இல்லாம இருந்திருக்கார்... கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாம் சரியாகிடும். லூஸ்ல விடுங்க” என்றார்.

வழக்கம்போல எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், ராஜாவும் சீமானும் ரகசியமாக உரையாடிக்கொண்டிருந்தனர். பேச்சோடு பேச்சாக, “யார் யாருக்கோ கவர்னர் பதவி கொடுக்கிறாங்க. உங்களுக்குத் தமிழ்நாட்டு கவர்னர் பதவி கொடுத்தா… விடியா அரசுக்கு கூடிய சீக்கிரம் முடிவு கட்டலாமே… ஆர்.என்.ரவி அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்குறாரே தவிர, சம்பவமே பண்றதில்லை” என்றார் சீமான்.

“அட நீங்க வேற… நான் எப்படி தமிழக(!) கவர்னராக முடியும்? ஒரே ஸ்டேட்காரங்களுக்கு அந்தப் பதவி கொடுக்க மாட்டாங்க தெரியாதா?” என்று ராஜா சொல்ல, “அண்ணே… நீங்க பீகார்க்காரர்தானே?” என்று சீமான் சீரியஸாகக் கேட்க, ராஜா முகம் சற்றே சிவந்தது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் கணக்குகள் மனக்கண் முன்னால் வந்ததால், வாய்வரை வந்துவிட்ட ‘ஆன்டி - நேஷனல்’ வசவை அப்படியே அடக்கிக் கொண்டார். பாஜக – நாதக கூட்டணி அமைப்பதா, பாஜகவிலேயே சீமானைச் சேர்ப்பதா என்றும் ஆலோசனை நடந்தது.

பின்னர், பாட்னா சந்திப்பில் ஃப்ளைட்டைப் பிடிப்பதற்காகப் பிரஸ் மீட்டைத் தவறவிட்ட தலைவர்கள் மாதிரி இல்லாமல், பிரதமர் மோடி, அதிபர் பைடன் பாணியில் ராஜாவும் சீமானும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதுவரை, நடப்பதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை, பிரஸ் மீட் என்றதும் பிரஷர் அதிகமாகி, “ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம். உங்களையெல்லாம் இங்கே யார் கூப்பிட்டா?” என்று பிரச்சினையை ஆரம்பித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE