செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதா... கைவிடுவதா?

By எஸ்.சுமன்

அமலாக்கத்துறையின் வியூகத்தில் வசமாய் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜியை காப்பாற்ற முனைவதில் திமுக திண்டாடி வருகிறது. வெளியிலிருந்து வரும் பாஜக மற்றும் அமலாக்கத்துறை அழுத்தங்களுக்கு அப்பால், திமுகவுக்கும் அதன் தலைவர்களுக்கும் காத்திருக்கும் பாதிப்புகள் குறித்து அதன் முக்கிய நிர்வாகிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். இவற்றின் மத்தியில் செந்தில் பாலாஜி காப்பாற்றப்படுவாரா அல்லது கைவிடப்படுவாரா என்ற புதிய விவாதமும் தமிழக அரசியல் மட்டத்தில் தலைகாட்டுகின்றன.

செந்தில் பாலாஜி

திமுக தலைமையின் பகீரதம்

செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் திமுக தலைமை பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது. கட்சிக்காக உழைக்கும் ஒவ்வொரு தொண்டனையும் காக்க வேண்டியது, திமுக போன்ற தொண்டனின் வியர்வையில் வளர்ந்த கட்சிக்கு அத்தியாவசியம். ஆனால் அந்த வரையறைக்குள், செந்தில் பாலாஜி எந்தளவுக்கு அடங்குவார் என்ற முதல் கேள்வியில், அவர் மீதான கட்சித் தலைமையின் அதீத அக்கறை கேள்விக்குள்ளாகிறது.

செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டிருப்பது பட்டவர்த்தனமான பணமோசடி வழக்கு. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் அவர் தரப்பே மறைமுகமாக ஒப்புக்கொண்ட வழக்கு. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வழக்கு.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை வளைத்திருப்பதில், திமுக மிகையான பதற்றம் கொள்வது துருத்தலாக நிற்கிறது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் திமுக ஏன் களங்கம் சுமக்க வேண்டும், இது மக்கள் மத்தியில் திமுகவுக்கு கெட்ட பெயர் கூட்டாதா என்ற கேள்விகளும் திமுக விசுவாசிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

அரசியல் களத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதனை அரசியல்வாதிகள் எதிர்கொள்வதும் புதிதில்லையே. அவசியமெனில் தன் மீதான குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு, தன்னை நிரூபித்து மீண்டு வரட்டும். மாவட்டச்செயலர் பொறுப்பில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, ஆகமுடிந்த அடிப்படையான ஆதரவை கட்சி வழங்கட்டும். மாறாக, அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க திமுக முயற்சிப்பது போன்ற விசித்திரங்களை தவிர்க்கலாமே என்றெல்லாம் திமுக விசுவாசிகளை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

செந்தில்பாலாஜி

அமலாக்கத்துறை அஸ்திரங்கள்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாகவே அமலாக்கத்துறை செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் ஒளிந்திருக்கும் உண்மை ஊரறிந்தது. தமிழகத்தின் செந்தில் பாலாஜி விவகாரம் மட்டுமன்றி, டெல்லி, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா என பல மாநிலங்களில் பாஜக தனது எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை கொண்டே பதம் பார்த்திருக்கிறது. இந்த அச்சுறுத்தலில் ஒரு சிலர் பாஜகவுக்கு தாவியதும், அடுத்து அவர்கள் மீதான விசாரணை கிடப்பில் விழுந்ததுமாக, அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை அறியக் கிடைப்பவை.

அதேசமயம், அமலாக்கத்துறை உரிய முகாந்திரமின்றி களத்தில் இறங்குவதில்லை. அமலாக்கத்துறையின் லகான் வேண்டுமானால் ஆள்வோர் கையில் இருக்கலாம். ஆனால், களத்தில் பாயும் அதிகாரிகள் லேசுபட்டவர்கள் அல்ல. ஆவணபூர்வமாக அனைத்தையும் சரிபார்த்த பின்னரே முற்றுகையைத் தொடங்குவார்கள். எல்லா திசையிலும் வேலி போட்ட பின்னரே வளைத்து முடக்குவார்கள். அந்த வகையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜி வசமாக சிக்கிக்கொண்ட பிறகு, அவருக்காக திமுக மிகையாக மெனக்கிடுவது கட்சியினர் மத்தியில் முகம் சுளிக்கச் செய்திருக்கிறது.

அதிருப்தியில் அடுத்த கட்டத் தலைகள்

அப்படி சுளிப்பவர்களில் பெரும்பாலானோர், செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் திமுக பெருந்தலைகள். இந்தத் தருணத்தை தங்களுக்கு ஆதாயமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் பார்க்கிறார்கள். திமுகவில் ஓடாய் உழைத்தவர்களில் கடைக்கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களும் ஏராளம். திராவிடக் கொள்கை ரத்தத்தில் ஊறியவர்களாக, தெருவில் கொடிபிடித்து, சிறைக்குச் சென்று கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர்களுக்கு, செந்தில் பாலாஜியின் அசுர வளர்ச்சி பெரும் அதிருப்தியை தந்திருக்கிறது. 5 கட்சிகள் தாண்டிய செந்தில் பாலாஜியின் நிலையற்ற அரசியல் பின்னணி, முந்தைய கட்சியின் சீதனமாக அவர் சுமந்து வந்த வழக்குகள், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் திமுக மீது படிவதை இந்த தீவிர திமுக விசுவாசிகள் ரசிக்கவில்லை.

அதிலும், தலைமையுடன் செந்தில் பாலாஜி கூடுதலாய் இழைவதும் அவர்களுக்கு எரிச்சல் தந்திருக்கிறது. கருணாநிதி காலத்தில், கட்சியின் தளகர்த்தா ஒவ்வொருவருடனும் தொப்புள் கொடி போன்ற பிணைப்பை தனித்துவமாக உணரச் செய்வார். அந்த தளகர்த்தாக்கள் பலரும் தற்போதை திமுக தலைமையுடன் விலக்கம் கண்டிருப்பதாக எண்ணுகிறார்கள்.

கிட்டத்தட்ட, ஜெயலலிதா - சசிகலா அதிகார ஆளுகையிலான அதிமுக பாணியின் தொனிக்கு தற்போதைய திமுக தலைமை மாறுவதாக அவர்கள் குமைகிறார்கள். இவர்கள் மத்தியில், இந்த தருணத்தை பயன்படுத்தியேனும் செந்தில் பாலாஜி பிடியிலிருந்து திமுக தலைமையை விடுவிக்க வேண்டும் என்ற பேராவல் பலருக்கும் மிகுந்திருக்கிறது.

இதில் தங்களது தனிப்பட்ட கணக்குகள் ஒளிந்திருப்பினும், செந்தில் பாலாஜி போன்றவர்களுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். மாறாக, செந்தில் பாலாஜியை காப்பாற்றும் முயற்சியில் திமுக தனது சக்தியை விரயமாக்கினால், சீற்றத்துக்கு ஆளாகும் அமலாக்கத்துறையின் அடுத்த பாய்ச்சலுக்கு திமுகவின் பல்வேறு தலைவர்களும் இரையாக நேரிடும் என்றும் விசனப்படுகிறார்கள்.

இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியால் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதை, உள்வட்டத்தில் வரவேற்கும் அளவுக்கு அதிருப்தியில் வளர்ந்திருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலால் செந்தில் பாலாஜி மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை தற்காலிகமாக திருத்திவைத்திருக்கிறார் ஆளுநர் என்பது தனிக்கதை.

செந்தில் பாலாஜி

பலனடையும் பாஜக

பாஜக தரப்பிலும், தமிழகத்தில் காலூன்றுவதற்கு இறுதி வியூகமாக திராவிட கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளே கடைசியில் கைவரவரப்பெற்றிருக்கிறது. வட மாநிலங்கள் போன்று மதத்தை முன்னிறுத்தியும், கடவுளர் வழிபாடுகளை முன்னிறுத்தியுமான அதன் முதல் சுற்று வியூகங்கள் ஏனோ எடுபடவில்லை. மொழியை முன்வைத்த அடுத்த சுற்றிலும் திமுகவுக்கு முன்பாக பாஜகவின் முயற்சிகள் எடுபடவில்லை. கடைசியாகவே ஊழல் குற்றச்சாட்டுகள் கைகொடுத்திருக்கின்றன. அதிலும் செந்தில் பாலாஜி போன்றவர்களை வளைத்ததன் மூலம் திமுக - அதிமுக என மாநிலத்தின் 2 பிரதான கட்சிகளையும் ஒருசேர சாய்க்க பாஜக முயற்சிக்கிறது.

’திமுக ஒரு ஊழல் கட்சி’ என்ற முழக்கமே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் அடிநாதமாக இருக்கப் போகிறது. அதிமுகவுடனும் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மட்டுமே; மற்றபடி அதனிடமிருந்து விலகி நிற்பதும், ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த பாஜகவுக்கு உதவும். தமிழகத்தில் என்றில்லை, இந்தியா நெடுக, பாஜகவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அமலாக்கத்துறை வளைத்திருப்பதன் பின்னணியில், இந்த ஊழல் வழக்குகளே பூதாகரமாய் வெளிப்பட இருக்கின்றன. இதெல்லாம் தேர்தல் களத்தில் மாநிலக் கட்சிகள் மீதான மக்கள் அபிமானத்தை சிதைக்கும். இவை ஒட்டுமொத்தமாக, பாஜகவுக்கு சாதகமாக மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என நம்புகிறது.

செந்தில் பாலாஜி

திமுக தலைமை என்ன செய்யும்?

“பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய ரூ.30 ஆயிரம் கோடி, செந்தில் பாலாஜி வசமிருப்பதால் மட்டுமே அவரை பதற்றத்துடன் திமுக அரவணைத்து பாதுகாக்கிறது” என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் குரல் மக்கள் மத்தியில் அதிகம் எதிரொலிக்கிறது. இது திமுகவை இன்னமும் பாதிக்கச் செய்யும். செந்தில் பாலாஜி அப்ரூவராக மாறி , முதல் குடும்பத்துக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும், செந்தில் பாலாஜி மீதான விஷேச அக்கறைக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இவற்றுக்கு அப்பால், செயல்புலியான செந்தில் பாலாஜி, அதிமுக கோட்டையான கொங்கு மண்டத்தில் திமுகவுக்கு புதிய ரத்தம் பாய்ச்சியது, இடைத்தேர்தலில் எப்பாடுபட்டேயினும் வெற்றி பெறச் செய்தது, பொதுக்கூட்டங்கள் முதல் இதர ஏற்பாடுகள் வரை ’இம்’ என்றால் துடிப்பாய் செய்து முடிப்பது என பலவகையிலும் திமுக தலைமைக்கு அணுக்கமாகவே இருந்திருக்கிறார்.

எனவே, எடப்பாடியின் குற்றச்சாட்டோ, திமுகவுக்கான ஆதாயமோ, செந்தில் பாலாஜியை முழுதுமாய் கைவிடுவது பல திசையிலும் திமுகவுக்கு சேதாரம் சேர்க்கும். அதேசமயம், செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் மக்களவை தேர்தல் நெருக்கத்தில் பாதகங்களை அதிகரிக்கவே செய்யும். எனவே, இரண்டுக்குமான இடைவெளியில் நூல் பிடித்தவாறு அடுத்து வரும் நாட்களில் திமுக தலைமையின் அணுகுமுறை அமைந்திருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE