கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை; சுற்றுலாப் பயணிகளால் திக்குமுக்காடிய கன்னியாகுமரி!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையால் களைகட்டின. திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கிருஷ்ண ஜெயந்தியான இன்றும், முந்தைய இரு தினங்களும் விடுமுறை என்பதால் தொடர் விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, படகு இல்லம் ஆகியவற்றில் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், குமரி மாவட்டத்தின் பிற சுற்றுலா தலங்களுக்குச் சென்றனர். திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் கடந்த 24ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 43 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அடைக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதனால், நேற்று முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அருவியில் இன்று காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மிதமாக கொட்டும் தண்ணீரில் குளித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 3 நாள் தொடர் விடுமுறையில் விவேகானந்தர் பாறையை 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE