நாகர்கோயில் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீவிபத்து: புகைமூட்டத்தால் மக்கள் அவதி 

By எல்.மோகன்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் இன்று மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 52 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோட்டில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி வருகிறது. குடியிருப்புகள் நிறைந்த இங்கு, குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருவதும், அதை அணைக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆவதும், இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதி மக்களும், சாலையோரவாசிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கை நாகர்கோவில் மாநகராட்சியின் மக்கள் நடமாட்டமில்லாத பகுதிக்கு மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வலம்புரிவிளை குப்பை கிடங்கில், வட்டவிளை பகுதியுடன் உள்ள குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. வெயிலுக்கு மத்தியில் காற்று வேகமாக அடித்ததால் குப்பைக் கிடங்கில் பற்றிய தீ வேகமாக பரவியது.

இதனால், வழக்கம்போல் குப்பைக் கிடங்கிலும், அதைச் சுற்றிய குடியிருப்புப் பகுதிகளிலும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்களும், சாலையில் பயணித்த பயணிகளும் மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாயினர். தகவல் அறிந்ததும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைப்போல் குப்பைகளைக் கிளறி தீயை அணைக்கும் வகையில் பொக்லைன் இயந்திரங்களையும் பயன்படுத்தி தீயை அணைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. வெயில் அதிகமாக அடித்து வரும் நிலையில், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஒரு நாளைக்குள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE