எம்ஜிஆர் குறித்து சர்ச்சைப் பேச்சு... ஆ.ராசாவிடம் 1 கோடி நஷ்டஈடு கேட்கிறது அதிமுக!

By காமதேனு

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசியதற்காக திமுக எம்பி-யான ஆ.ராசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எம்.பி ஆ.ராசா

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, எதிர்க்கட்சி தலைவர்கள், இந்து மதம் குறித்து அதிரடியான கருத்துகளை பேசி வருபவர். தனது அதிரடி கருத்துகளால் பல நேரங்களில் சர்ச்சைக்குள் சிக்கிக்கொள்வார் ராசா. அப்படித்தான் அண்மையில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சையான கருத்தை விதைத்தார்.

ராசாவின் இந்தப் பேச்சு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து எம்ஜிஆர் அபிமானிகளும் அதிமுகவினரும் ஆ.ராசாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் கடுமையாக எதிர்வினையாற்றினர். இருந்த போதும் தனது பேச்சுக்காக மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என தெரிவித்த ராசா, “முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை பற்றி அதிமுகவினர் தரக்குறைவாக பேசியது குறித்து பல வழக்குகள் விசாரணையில் உள்ளது. அதற்கெல்லாம் அவர்கள் வருத்தம் தெரிவிப்பார்களா?” எதிர் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வெங்கடேசன் எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசியமைக்காக ஆ.ராசா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அதில், “எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களோடு ஆ.ராசா பேசியது எம்ஜிஆரின் புகழுக்கும், பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம், பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரை ஆ.ராசா சிறுமைப்படுத்தியுள்ளார். அவரின் இந்த அவதூறுப் பேச்சு, எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் அதிமுகவினருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தனது செயலுக்கு ஆ.ராசா உடனடியாக வருத்தமும், மன்னிப்பும் கேட்க வேண்டும். அத்துடன் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE