திருப்பூர்: திருப்பூரில் செயல்படாமல் கிடக்கும் மில் வளாகத்திலுள்ள மரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ராட்சத வெளவால்கள் தினமும் இரவில் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் தனலட்சுமி மில் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த மில் மூடப்பட்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த மில் செயல்பட்டு வந்த காம்பவுண்டில் ஏராளமான மரங்கள், செடிகள் வளர்ந்து புதராக மாறியுள்ளது. காம்பவுண்டில் உள்ள கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன.
மாநகரின் மத்தியில் உள்ளபோதும், காம்பவுண்ட் மட்டும் முழுவதும் காடாகவே இருக்கிறது. இதனால், இங்குள்ள மரங்களில் ஏராளமான வெளவால்கள் கூடுகட்டி வசிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ராட்சத வெளவால்கள் பகல் முழுவதும் மரங்களிலும், கட்டிடங்களிலும் தலைகீழாக அமைதியாகதான் இருக்கின்றன.
ஆனால், இரவாக தொடங்கினால் ராட்சத வெளவால்களின் கூச்சல் அதிகரிக்க தொடங்குகிறது. குறிப்பாக கொங்கு பிரதான சாலை, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு படையெடுக்கின்றன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
» சென்னையில் பரபரப்பு: அண்ணா அறிவாலயம் வாயிலில் பீர் பாட்டில் வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகி
வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்து பகுதிகளிலும் எச்சங்களை நிரப்பி துர்நாற்றம் வீச செய்கின்றன. பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக, சாலையின் கீழாகவே பறந்துதிரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்டோர் அச்சமடைகின்றனர்.
வெளவால்களின் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், அவற்றால் பரவக்கூடிய நிஃபா உள்ளிட்ட வைரஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வெளவால்களை முறையாக அப்புறப்படுத்த வனத்துறை, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.