சீரானது நீர்வரத்து: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: நீர்வரத்து சீரானதை அடுத்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும்.

கடந்த 12ம் தேதி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்து அருவியிலும் நீர்வரத்து சீராகியது. இதனைத் தொடர்ந்து 14 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் (ஆக.26) அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,"கடந்த வாரம் மழை தீவிரமடைந்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீராகி உள்ளது. ஆகவே தடை நீக்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.30. மது அருந்தி வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது" என்று வனத்துறையினர் கூறினார்.

இருப்பினும், 14 நாட்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இன்று திடீரென அனுமதி அளிக்கப்பட்டதால் தொலைதூர சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் தேனி மாவட்ட மக்களே அதிகளவில் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE