கோவையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து அசத்திய குழந்தைகள் 

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து குழந்தைகள் அசத்தினர்.

கோவை கொடிசியா வளாகம் அருகே, இஸ்கான் ஸ்ரீ ஜெகன்நாதர் (ஹரே கிருஷ்ணா) ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி தினவிழா கொண்டாட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

மேலும், தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹாராஜின் சிறப்பு பிரசங்கம், அபிஷேகம், கோ - பூஜை, பகவான் ஜெகன்நாதருக்கு தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, ஸ்ரீ ராதா கிருஷ்ணர், ஸ்ரீ ஜெகன்நாதர், பல தேவர், சுபத்ரா தேவியர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் இன்று பொதுமக்களுக்கு காட்சியளித்தனர்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவை இஸ்கான் ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ ராதா கிருஷ்ணர், ஸ்ரீ ஜெகன்நாதர், பல தேவர், சுபத்ரா தேவியர் ஆகியோர். | படம்: ஜெ.மனோகரன்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று காலை முதலே, ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவர்கள் தலையில் கிரீடம் அணிந்து, மயில் இறகு வைத்து, கிருஷ்ணர் வேடம் அணிந்தும், சிறுமிகள் ராதை வேடம் அணிந்தும் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE