திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் ஆண்டிபாளையம் - இடுவம்பாளையம் சாலையில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பால்மணி. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் நிறுவனத்துக்குள் இருந்த பனியன் துணிகள், நூல் கட்டுகள் உள்ளிட்டவை மள, மளவென தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மாவட்ட உதவி இயக்குநர் தீயணைப்பு அலுவலர் வீர்ராஜ் தலைமையிலான சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் தீயை முற்றாக அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மத்திய போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE