சென்னை: துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல ‘ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன். அதை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்
தமிழக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பேசியரஜினிகாந்த், “ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. பழைய மாணவர்களை தான் சமாளிக்க முடியாது. இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்' என்று கூறியது சர்ச்சையை உருவாக்கியது.
இதனையடுத்து காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்த நாள் விழாவில் நேற்று பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது” என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்தது பரபரப்பை பற்றவைத்தது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'துரைமுருகன் நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்” என தெரிவித்தார்.
» திருத்துறைப்பூண்டியில் மதிமுக நகரச் செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை
» எதிர்மறை விஷயங்களுக்கு என் காதுகள் மூடியே இருக்கும் | யுவன் சங்கர் ராஜா
ரஜினி பற்றிய விமர்சனம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள துரைமுருகன், “ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன். நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம்” என்றும் கூறியுள்ளார்.