காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தற்போது நடைபெற உள்ள தேர்தல் மூலமாக மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய மாநிலங்களவை உறுப்பினர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே வீட்டில் நேற்று ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி எம்.பியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியை இந்த முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கானும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி-யாக, 2006 முதல், சோனியாகாந்தி இருந்து வருகிறார். 70 வயதான அவர் வயது மூப்பு காரணமாக, உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். இதனால் இனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரும் கட்சி நிர்வாகிகளும் முடிவு செய்துள்ளனர்.
அதனால் ராஜஸ்தான் அல்லது இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து, மாநிலங்களவை உறுப்பினராக அவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். ரேபரேலி தொகுதி எப்போதும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதி என்பதால் அங்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை இந்தமுறை களமிறக்க உள்ளனர்.