தேர்தல் தர்பார் I ஜாமீனுக்காக அமைச்சர் பதவி ராஜினாமா? செல்லுபடியாகுமா செந்தில் பாலாஜியின் தாஜா?

By எஸ்.சுமன்

சுமார் 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி, தற்போது ராஜினாமா கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஜாமீன் பெறவும், மக்களவை தேர்தல் தருணத்தில் களத்தில் இறங்கவும், தோதாகவே செந்தில் பாலாஜி ராஜினாமா கோரியிருப்பதாக திமுக அபிமானிகள் பரபரக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர் என்றபோதும், திமுக தலைமை மற்றும் கிச்சன் கேபினட் என உச்ச அதிகாரத்துடன் எளிதில் ஒட்டிக்கொண்டவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்தபோதும் அப்படித்தான்; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற வகையில், தனக்காக போயஸ் கார்டனின் கதவுகள் பிரத்யேகமாய் திறக்கும் அளவுக்கு அதிகாரம் மிக்கவராகவே செந்தில் பாலாஜி வளைய வந்திருக்கிறார். .

செந்தில் பாலாஜி

திமுகவுக்கு தாவிய பிறகும் அதே பாணியில் தலைமையின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு உரியவராக விரைந்து மாறினார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு செந்தில் பாலாஜியின் விசுவாசமும், அதன் பலனாக முதல்வர் குடும்பத்தின் ஆசிர்வாதமும் நிரம்பப் பெற்றிருந்தார் செந்தில் பாலாஜி. மேற்கு மண்டலத்தில் எழுச்சி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணிக்கான வெற்றி என செந்தில் பாலாஜியின் கொடி உயரப்பறந்தது.

அண்ணாமலையின் ரஃபேல் கைக்கெடிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது செந்தில் பாலாஜிக்கான சங்கட நேரம் தொடங்கியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது அரிய அகஸ்மாத்தாக மின்சாரம் தடைபட்டதில், செந்தில் பாலாஜிக்கான இருள் கவியத் தொடங்கியது. ஜூன் 14 அன்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது தொடங்கி கடந்த 8 மாதமாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் செந்தில் பாலாஜி.

அதிரடி நடவடிக்கையாக ஜூன் 30 அன்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக வேகம் காட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் டெல்லி அதிருப்தி தெரிவித்ததில், அதே வேகத்தில் அந்த உத்தரவை திரும்பவும் பெற்றார். அதன் பின்னர் ஜாமீன் பெற செந்தில் பாலாஜி தரப்பு தலையில் தண்ணீர் குடித்து பார்த்தது. அவருக்கு ஜாமீன் தந்தால், அமைச்சர் என்ற அதிகாரத்தை தனக்கு ஆதாயமாக பாய்ச்சுவார் என்று அமலாக்கத்துறை கடுமையாக ஆட்சேபித்தது.

செந்தில் பாலாஜி

அண்மையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் காவலை 19வது முறையாக நீட்டித்தது. மேலும் ஜாமீன் கோரிய வழக்கில், செந்தில் பாலாஜி இன்னமும் அமைச்சராக தொடர்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஜன.30 அன்று கேள்வி எழுப்பியது. இந்த வழக்கின் விசாரணை நாளை(பிப்.14) வரவுள்ள சூழலில், நேற்றிரவு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து விரைவில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வருவார்; மக்களவை தேர்தல் களத்தில் தனது பிரத்யேக வியூகங்களை முன்னிறுத்துவார் என்று திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக பலமாக உள்ள மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு வலுசேர்க்க களமிறக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. அதற்கொப்ப கட்சியின் சீனியர்களே மிரளும் அளவுக்கு அங்கே அவர் களமாடினார். அதிமுகவின் எடப்பாடியார் பாஜகவின் அண்ணாமலையார் என எதிர்க்கட்சிகளின் தலைமைகள் வீற்றிருக்கும் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வேகம் அவர்களை திணறடித்தது. பிற்பாடு செந்தில் பாலாஜி சிறை சென்றதும், அவரால் காலியான அந்த இடத்தை நிரப்ப திமுக தலைமை தடுமாறியது.

அமைச்சர் உதயநிதியை மேற்கு மண்டலத்துக்கு அனுப்பி பார்த்தது. ஆனால், அங்கே எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பு தட்டிப்போகும் சூழல் நேர்ந்தால், அவையே உதயநிதியின் எதிர்காலத்துக்கு அடிச்சறுக்கலாகும் ஆபத்து குறித்தும் திமுக தலைமை கவலை கொண்டது. வேறு வழியின்றி செந்தில் பாலாஜியை சிறையிலிருந்து மீட்க முடிவானது. அதற்காக காத்திருந்த செந்தில் பாலாஜியும், விசுவாசம் மாறாதவராக தற்போது அமைச்சர் பதவியை துணிந்து துறந்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி - அசோக்

கட்சி, ஆட்சி சார்ந்த காரணங்களுக்கு அப்பால், தனிப்பட்ட காரணமும் இந்த முடிவில் செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது. அமலாக்கத்துறை விரட்டலில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக இருந்து வருகிறார். அசோக்கை வளைக்கும் முடிவில் அவரை நெருக்கி வரும் அமலாக்கத்துறை விரைவில் கைது செய்யவும் இருக்கிறது. இந்த சூழலில் அமைச்சர் பதவியை துறந்து, தம்பி அசோக் மீதான வேகத்தை மடை மாற்றவும் செந்தில் பாலாஜி முடிவெடுத்திருக்கிறார்.

இப்படி தனக்கே உரிய, சிறு நகர்வில் பலவற்றையும் சாதிக்கும் போக்கை செந்தில் பாலாஜி வெற்றிகரமாக மீண்டும் தொடங்கியிருக்கிறார். அடுத்த சுற்றில், அவரது ஜாமீனுக்கான முயற்சிகள் வேகம் பிடிக்க இருக்கின்றன. அப்படி ஜாமீன் சாத்தியமானால், பழைய அதிரடி அரசியலுக்கும் திரும்ப வாய்ப்பாவார். மக்களவை தேர்தல் களமும் அவரை அடுத்த சுற்று அரசியலில் புடம்போடக் காத்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது வரும் நாட்களில் மட்டுமே தெரிய வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE