சென்னை: தமிழகம் முழுவதும் நாளை மறியல் போராட்டம் நடத்தப் போதவதாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வுபெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.
இந்த பிரச்சினைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, ஆக.16 முதல் வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளோம்.
» ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: பிரதமர் மோடி பாராட்டு
» கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.5-க்கு விற்பனை
இதன்தொடர்ச்சியாக நாளை (ஆக.27) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்