சாத்தான்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு - காலி குடங்களுடன் வீதிக்கு வந்த பெண்கள்

By KU BUREAU

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார் மேலத்தெரு பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திடீரென தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜோசப், வார்டு கவுன்சிலர் ஜோசப் அலெக்ஸ், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் தண்ணீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE