டிட்டோஜாக் சார்பில் செப்.10-ல் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்க முடிவு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: டிட்டோஜாக் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.10-ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம், செப்.29, 30, அக்.1-ல் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதாக மதுரையில் இன்று நடந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தெரிவித்தார்.

மதுரையில் இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இதற்கு துணைப் பொதுச்செயலாளர் தே.முருகன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச்செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்றார். எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டேவிட்ராஜன் நன்றி கூறினார். இதில், மாநில பொதுச்செயலாளர் ச.மயில் மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: “தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு, முன்னுரிமையை பாதிக்கும் அரசாணை: 243ஐ ரத்து செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஏற்ற 12 கோரிக்கைகளின் மீது ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டிட்டோஜாக் சார்பில் செப்.10-ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, செப்.29, 30, அக்.1 ஆகிய 3 நாட்கள் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.

அதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக பங்கேற்பதென மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. இதில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பர். முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட வாரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பர்.

தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். அதன் மூலம் தொடக்கக்கல்வித்துறையில் சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE