சென்னை: இனம், மொழி, மாநிலம் காக்க உழைப்பதுதான் கருணாநிதிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியாக இருக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு..க.ஸ்டாலின் உருக்கத்துடன் கூறினார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ என்ற பெயரில் நூலாக எழுதிஉள்ளார். இந்நூலை சீதை பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நூலை வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல, தாயும் அவர்தான். எனக்கு மட்டுமல்ல, எ.வ.வேலு உள்பட லட்சக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு தந்தை, தாயாக, தலைவராக இருந்து நம்மை வளர்த்து போற்றிய அற்புத ஆளுமை. கட்சியினரை மட்டுமல்ல, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களையும் அரவணைத்தவர் அவர். எவ்வித வேறுபாடும் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்தக்கூடியவராக இருந்தார். அப்படிப்பட்ட தலைவருக்கு ‘கலைஞர் எனும் தாய்’ நூல் தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
» தமிழகத்தில் ஆன்மிகம் குறித்து பேசாமல் அரசியல் செய்ய முடியாது: பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கருத்து
‘எ.வ.வேலு என்றால், எதிலும் வல்லவர்’ என்று கருணாநிதி பாராட்டுவார். இன்று எனக்கும் வேலு அப்படித்தான் இருக்கிறார். எத்தனை வேலைகள் கொடுத்தாலும் சிறப்பாக செய்து காட்டுகிற வல்லமை அவருக்கு உண்டு. எதிலும் வல்லவரான எ.வ.வேலு எழுத்திலும் வல்லவர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார். சோதனை எனும் நெருப்பிலேபுடம் போட்ட சொக்கத் தங்கமாக விளங்கும், வரலாற்றுக்கு உரிமைபடைத்த ஒரு பேரியக்கம் திமுக என்று எழுதியிருப்பதை படிக்கும் போது பெருமைப்படுகிறேன்.
இந்திய வரைப் படத்தில் பெரிய எழுத்திலே குறிப்பிடப்படாத சிற்றூரில் பிறந்த கருணாநிதிக்கு இந்திய அரசே நாணயம் வெளியிட்டது என்றால், அத்தகைய புகழ்பெற்ற தலைவரின் உடன்பிறப்புகள் தான் நாம் என்பதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும். அவருடைய புகழையும், பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதோடு இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பது தான் கருணாநிதிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றி.
இந்த விழாவுக்கு ரஜினிகாந்த் வருகை தந்து என்னை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். என்னைவிட ஒரு வயது அதிகம்தான். அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அறிவுரையை புரிந்து கொண்டேன். எதிலும் தவறிவிட மாட்டேன். எல்லாவற்றிலும் நான் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ‘‘கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக, சட்டப்பேரவை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றியை பெற்றது. இதற்கு அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானம் ஆகியவைதான் காரணம். எப்போதுமே வகுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை கையாள்வது கடினம் அல்ல, ஆனால், பழைய மாணவர்களை கையாள்வதுதான் மிகவும் கடினம். திமுகவில் நிறைய பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்அசாத்தியமான பழைய மாணவர்கள். அவர்களை சமாளிப்பது சாதாரணம் அல்ல. அந்த வகையில் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டார்.
<
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ‘இந்து’ என்.ராம் ஆகியோர்ஆய்வுரை வழங்கினர். அமைச்சர் எ.வ.வேலு ஏற்புரையாற்றும்போது, ‘‘11 ஆண்டு கால முயற்சி இந்த புத்தகம். இதற்காக பல நூல்களைப் படித்து, குறிப்புகள் எடுத்து இரவு பகலாக எழுதினேன்’’ என்றார். முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார். நிறைவாக சீதை பதிப்பகம் கவுரா ராஜசேகர் நன்றி கூறினார்.