மேகேதாட்டு அணையை தடுக்க தீவிர முயற்சி: அமைச்சர் துரைமுருகன் தகவல்

By KU BUREAU

சென்னை: மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டில் புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரி கர்நாடக அரசு மனு அளித்துள்ளது. இதில் இந்த அணையானது கட்டப்படும் பரப்பளவு, பாதிக்கப்படும் வனப்பரப்பு, திட்டத்தொகை உட்பட பல்வேறு விவரங்களை குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாகவும் தமிழக அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2019-ல் சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கர்நாடகாஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தமிழக அரசு தொடக்கம் முதலே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இவ்வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் வாயிலாகவும் நேரிலும் வலியுறுத்தியுள்ளார். மேகேதாட்டு அணை திட்டத்தையோ அல்லது வேறு எந்த அணை திட்டத்தையோ மேற்கொள்ள கர்நாடக அரசுக்குஎவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என 4 முறை வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், நானும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை 3 முறை சந்தித்து மேகேதாட்டு அணைக்கு தொடர்புடைய மாநிலங்களின் இசைவை பெறாமல் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளேன்.

இதனிடையே, கர்நாடக அரசின்நிதிநிலை அறிக்கையில் மேகேதாட்டு அணைக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேரவை குழு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி, மத்திய நீர்வள அமைச்சக செயலர், சுற்றுச்சூழல் செயலர் ஆகியோருக்கு தமிழக நீர்வளத்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

மேகேதாட்டு அணை தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, தமிழக அரசு சார்பாக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்.

கடந்த 2007-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பிலும், 2018-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், கர்நாடகாவில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும், மத்திய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதிநீர் இயக்குநகரத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல், இவை எதையும் பெறாமல் கர்நாடக அரசு அணை எதையும் கட்ட இயலாது. கர்நாடக அரசின்இத்திட்டத்தை தடுத்து நிறுத்தவும், தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE