அயோத்தியில் தற்காலிக இடத்தில் உள்ள ராமர் சிலையை, அங்கிருந்து புதிய கோயிலுக்கு எடுத்து செல்லும் புனிதப் பணியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை கடந்த, 2020 ஆகஸ்ட் 5ல் பூமி பூஜை செய்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அடுத்தாண்டு ஜனவரி 24ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், தற்போது தற்காலிக இடத்தில் இருக்கும் ராமர் சிலையை, அங்கிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறை வரை பிரதமர் மோடி எடுத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 மீ. தூரம் ராமர் சிலையை எடுத்து செல்லும் புனிதப் பணியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து அன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள் முக்கிய பூஜைகள் நடக்கிறது. அதில், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அர்ச்சகர்கள் பங்கேற்கின்றனர்.
பிறகு, ஹிந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கர்ப்பகிரகத்தில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதனிடையே, 3 விதமான ராமர் சிலை செய்வதற்கான பணிகளில் கோயில் அறக்கட்டளை தீவிரம் காட்டி வருகிறது. அதில் எந்த சிலையை கர்ப்பகிரகத்தில் வைப்பது என்ற முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், ராஜஸ்தான் மார்பிள் அல்லது கர்நாடகா கிரானைட் கற்களால் செய்யப்படும் ராமர் சிலையில் ஒன்றை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.
மற்றொரு சிலையானது, கோயிலின் இரண்டாவது தளம் கட்டுமான பணிகள் முடிவடைந்த உடன் வைக்கப்படும். இரண்டாவது தளத்தில் ராமர் தர்பார் அமைக்கப்படும். கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, சரயு மற்றும் புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
இந்த முக்கிய நிகழ்வுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்படுகின்றனர். இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!