50 மெட்ரோ நிலையங்களின் நுழைவு பகுதிகளில் அமைகிறது வணிக வளாகங்கள்!

By KU BUREAU

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 3 வழித் தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் மொத்தம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதாவது, மாதவரம் – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடம் (26.1கி.மீ.), மாதவரம் – சோழிங்கநல்லுார் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகிய வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் இயக்குவது மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்று வழிகளில் வருவாய் ஈட்ட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: "மெட்ரோ ரயில் கட்டணம் மட்டும் இன்றி, மாற்று வழிகளில் வருவாய் ஈட்டும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. காலியாக உள்ள இடங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால், நிர்வாகத்துக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

தனியார் அலுவலகத்துக்கு இடம்: இதேபோல, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு பகுதிகளை இணைத்து, வணிக பகுதிகளுக்கான இடம்ஒதுக்கி, பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டிடங்கள் அமைக்கப்படும். தனியார் அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு பகுதியில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு செய்ய 8 டெண்டர் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வும் நடைபெறுகிறது. சொத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாகவும், இதனால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. முன்பு, மெட்ரோ ரயில் நிலையத்துடன் வணிக வளாகங்கள் ஒன்றாக சேர்த்து இருந்தன.

இப்போது,மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். எல்லா சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி வணிகவளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டுமெட்ரோ ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்த வணிக வளாகமும்பயன்பாடுக்கு கொண்டு வரப்படும்." இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE