தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

By காமதேனு

நான் வரும்போது மின்விளக்குகள் அணைக்கப்பட்டன, கடைகள் அடைக்கப்பட்டன, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் எமர்ஜென்சி நிலைபோல உள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

நட்டா

சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நேற்று மாலை நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்றார். பின்னர் மின்ட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி நட்டா உரையாற்றினார்.

"பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு எப்போதும் முக்கியமானது திருவள்ளூவர் பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பா.ஜ.க தலைவர்களின் இதயங்களில் எப்போதும் தமிழ்நாடு இருக்கிறது.

பாரதத்தின் வலிமையை நிலைநிறுத்த தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. பிரதமர் மோடிக்கு பிடித்தமான மாநிலம் தமிழ்நாடு. ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை உறுதிப்படுத்தியவர் எம்.எஸ் சுவாமிநாதன். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத்ரத்னா விருது அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளது மத்திய அரசு. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு பெருமை கொள்ளும் விதத்தில் உள்ளது.

யாத்திரையில் பங்கேற்ற நட்டா

இந்தியா கூட்டணி என்பது குடும்ப கூட்டணி. வாரிசு அரசியலை கொண்ட கட்சிகள் தான் அந்த கூட்டணியில் இருக்கின்றன. தமிழகம் சீரழிந்து வருகிறது. தி.மு.க.,வின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து விட்டது. மாநில அரசுக்கு மனசாட்சியும் இல்லை, ஜனநாயகமும் இல்லை. நான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. இங்குள்ள கடைகள் மூடப்பட்டன. யாரும் வெளியே வராமல் செய்து விட்டார்கள். இது எமர்ஜென்சி நிலை போல் உள்ளது.

தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்து விட்டது. திமுகவின் விளக்குகள் விரைவில் அணைக்கப்படும். செல்வாக்கு நிறைந்த தமிழ்நாட்டில் மோசமான ஆட்சியாளர்கள் உள்ளனர்.

95 சதவீத செல்போன் உதிரிபாகங்கள் இந்தியாவில் தயாராகிறது. உலக பொருளாதாரத்தால் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-ம் இடத்திற்கு வந்துள்ளோம். பா.ஜ.க 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு வருவோம். 2024-ல் மோடி ஆட்சி அமைக்க உங்கள் ஆதரவைத் தர வேண்டும்" என்று நட்டா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE