விதிமீறல்: நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கு இடிப்பு: விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்தது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும்.
இதனிடையே, "N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார்.
“ஆன்மிக வரலாற்றில் பழநி முருகன் மாநாடு!” - இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சனிக்கிழமை காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறையின் சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன்மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும்” என்று பேசினார்.
பழநி மாநாடு: தமிழிசை விமர்சனம்: “சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா? முதல்வர் செல்லவில்லை என்றால், உடனடியாக எழுதப்படாத துணை முதல்வர் தம்பி உதயநிதி சென்று தொடங்கி வைப்பார். எனவே, பழநி முருகன் மாநாடு பெயரளவில் நடத்தப்படுகிறது. நாங்கள் தங்களது நிலைப்பாட்டில் அப்படியேதான் இருப்போம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர் பிரச்சினை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்கள்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த ரஜனீஷ் உட்பட 17 மாணவர்களுக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதனிடையே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், அதன் முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. சில தினங்களில் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளன.
பத்லாபூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம்: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் சரத் பவார் தலைமையில் புனேவில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் அணுகுமுறை மாறினால்... - ஜெலன்ஸ்கி: ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அந்த சந்திப்பு மிக நன்றாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக எனது கருத்துகளை முன்வைத்தேன்.
இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும்” என்று அவர் கூறினார்.
கிரிக்கெட்டில் இருந்தும் ஷிகர் தவான் ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022-ல் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். 38 வயதான அவர், 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார்.
திருச்சி எஸ்.பி Vs சீமான்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி எஸ்பி-யான வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.
இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி-யான வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்பி-யை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், “ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்” என்று திருச்சி எஸ்பி வருண்குமார் கூறியுள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.
நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என்று சீமான் கூறினார்.
2 புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது: கூடலூர் சசக்ஸ் பகுதியில் விஷம் வைத்து இரண்டு புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.