வள்ளலாரைப் போன்றவர் உதயநிதி ஸ்டாலின்: மனமுருகிய அமைச்சர் சி.வெ.கணேசன்!

By ந.முருகவேல்

விருத்தாச்சலம்: “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போன்றவர் நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி” என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் விருத்தாசலத்தில் நடைபெற்ற இளைஞரணி நிகழ்ச்சியில் பேசினார்.

திமுக இளைஞரணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 75 மாணவ,மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளை நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். திமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

அவர் பேசுகையில், “திமுக அரசு இளைஞர்களின் நலன்கருதி எண்ணற்றத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என அவர்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.1000, மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 என வழங்கி வருகிறார் முதல்வர். அதோடு மட்டும் நின்று விடாமல் நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி என அதன் மூலம் வழங்கப்படுகிறது.

இவற்றை மாணவ,மாணவியர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை நீங்கள் தான் முறையாக பயன்படுத்த வேண்டும். அதற்கான கடும் முயற்சி மேற்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம். அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் தொழில் பயிற்சி முடித்தவர்களில் 2310 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சேப்பாக்கத்தில் வேலைவாய்ப்பை நடத்தினோம். அந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றிருந்தார். அவர் தான் வேலைவாய்ப்பு முகாமை எப்படி முறையாக நடத்த வேண்டும் என கற்றுக் கொடுத்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் நலத்துறை மூலம் 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போன்றவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி. ஏன் அதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இளைஞர்கள் யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவவேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். எனவே இங்கு வந்திருக்கக் கூடிய இளைஞர்கள் வெற்றி பெற்றவர்கள், அடுத்த நிலைக்கு செல்வது குறித்து, புரிந்து செயல்பட வேண்டும். வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மனம் தளராமல் அடுத்த வெற்றிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE