அதிமுகவின் உண்ணாவிரதத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த சீர்மரபினர் கைது

By என்.சன்னாசி

மதுரை: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சீர்மரபினர் நல சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது என, சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை, தேனி ,திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில், மதுரை செக்கானூரணியில் இப்பிரச்சினைக்காக இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

அப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு சீர்மரபினர் நலச் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி, மாநில மகளிரணி தலைவர் தவமணி தேவி உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தலையில் மஞ்சள் துண்டுகளை கட்டிக்கொண்டு வந்தனர். அவர்கள் திடீரென அங்கிருந்த தேவர் சிலையின் மேல் பகுதியில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிமுகவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து, துரைமணி, தவமணி தேவி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பிறகு மாலையில் விடுவித்தனர்.

இதுகுறித்து சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகி துரைமணி கூறுகையில், “கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையிடம் இணைக்க முடிவெடுக்கவில்லை என, திமுக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு எதிராக 10.5 இட ஒதுக்கீடு அறிவித்தவர். எங்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரியபோது, அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, இப்பிரச்சினையை கையில் எடுத்து, தேனி உட்பட தென் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூக ஓட்டுக்களை பெற முயற்சிக்கிறார். எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதிமுகவினர் இப்பிரச்சினையை அரசியலாக்கி, ஓட்டுக்களை பெறும் நோக்கில் உண்ணாவிரதம் இருப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE