தமிழ்நாட்டில் எந்த நேரத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும்... பாஜக துணைத்தலைவர் பேச்சால் பரபரப்பு!

By காமதேனு

மக்களவைத் தேர்தலுக்குப் பின் சட்டமன்றத்திற்கு தேர்தல் வராமலேகூட தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பணிகள் குறித்து மாநில பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். "தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளுக்காக, பணிக்குழுக்கள் உட்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சிப்பொறுப்புக்கு வர வேண்டும் என இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். பாஜகவின் தேவை தமிழகத்துக்கு மிகுந்த அவசியமானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கே.பி.ராமலிங்கம்

தமிழகத்தில் வட சென்னை முதல், கன்னியாகுமரி வரை, 39 தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவோம். மக்களவைத் தேர்தலுக்கு பின், சட்டப்பேரவைத் தேர்தல் வராமலேயே கூட, பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை வரலாம். அதன் முன்னோட்டமாகத் தான், முன்னாள் நிர்வாகிகள், பாஜகவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நாட்டிற்கு தேசியமும், ஆன்மிகமும் உகந்தது என்ற உணர்வுக்கு தமிழக மக்கள் வந்துள்ளனர். அதனால், தமிழகத்தில் எந்த நேரத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE