இதோ வந்துட்டாருல்ல... திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

By காமதேனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்புவை சர்சைக்குரிய வகையில் பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

திமுக பொதுக்கூட்ட மேடைகளில் எதிர்கட்சியினரை குறிப்பாக பெண்களை அநாகரீகமாக பேசுவதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. கையடக்க செல்போனில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் நல்ல அறிமுகம். சென்னை தமிழில் கலந்து கட்டி அடிக்கும் இவரது பேச்சால் கூட்டம் களைகட்டுகிறதோ இல்லையோ, எதிர்கட்சிகள் கடுப்பாகி விடும்.

சென்னை எருக்கஞ்சேரியில் கடந்த ஜூன் 16-ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சு அவரை கைது செய்யும் வரை கொண்டு சென்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அநாகரீமாக பேசினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

அண்ணா அறிவாலயம்

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோல அநாகரீகமாக பேசக்கூடாது என கூறி ஜூலை மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்ததை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE