‘இதுதான் கடைசி ரெய்டுன்னு அறிவிப்பீங்களா?’ அமலாக்கத் துறைக்கு உதயநிதி அன்பு நிபந்தனை!

By சானா

“பெய்டுன்னு மெசேஜ் வந்தா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க… நீங்க ரெய்டுக்கே ரெம்ப ஜாலியா இருக்கீங்க. கில்லிண்ணே நீங்க” – கருணாநிதி காலத்திலிருந்து திமுக இளைஞரணியில் இருக்கும் மூத்த உடன்பிறப்பு ஒருவர் கணக்குவழக்கில்லாமல் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்க, உதட்டைக் குவித்து, கண்ணைச் சிமிட்டியபடி அதை ரசித்தபடி ஒற்றையாளாக சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார் உதயநிதி.

‘மாஎம்.எல்.ஏ, மாஅமைச்சர் என்று உயர்ந்து இருந்து ‘மாமன்ன’னாக உச்சமடைந்திருக்கும் உலகின் உதயசூரியனாம் அண்ணன் உதயநிதி!” என்று திமுக மூத்த அமைச்சர் ஒருவர் முழங்க, அவரைவிடவும் மூத்த அமைச்சர்கள், “வாழ்க… வாழ்க!” என்று முழக்கமிட்டு வானையே அதிரவைத்தனர். அப்போது, “வழிவிடுங்க… வழிவிடுங்க” என்றபடி அதிரடியாக வந்த அமலாக்கத் துறையினர், தொடர்ந்து ஆயிரத்து நூற்றுப் பத்தாவது முறையாகத் தமிழகத்தில் சோதனை நடத்த ஆரம்பித்தனர்.

உடனே, “அக்கிரமம்... அநியாயம்! ‘ஈடி’யாவது மோடியாவது… ஒன்றிய அரசே ஓடிப்போ!” என்று அனிச்சை செயலாக ஆவேசமடைந்து தொண்டையடைக்க கோஷம் போடத் தொடங்கினர் தொண்டர்கள்.

சலித்துக்கொண்ட உதயநிதி, “என்னப்பா இது! ‘பாட்ஷா’ பட ரஜினி கணக்கா எத்தனை அடி விழுந்தாலும் சத்தம் போடாம சந்தோஷப் புன்னகை செய்யணும்னு சொல்லியிருந்தேனே… மறந்துட்டீங்களா?” என்றார்.

புதுவித டீலிங் புரியாவிட்டாலும் மையமாகத் தலையாட்டிவிட்டு, ‘விருந்தினரை’ உபசரிக்கத் தொடங்கினர் உடன்பிறப்புகள். ரோஸ் மில்க் முதல் வெரைட்டி ரைஸ் வரை விதவிதமான ஐட்டங்கள் அதிகாரிகளுக்குப் பரிமாறப்பட்டன. அதிக ஃபைல்களைப் பார்த்த அதிகாரிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கி ‘தளபதி’ பாணியில் உற்சாகப்படுத்தினார் ‘மாமன்னர்’.

பலமணி நேர பரிசு வழங்கலுக்குப் பின்னர் சோர்வடைந்த உதயநிதி, அங்கிருந்த மேஜையில் சாய்ந்தபடி, “இதே மாதிரி நல்லா வேலை பார்க்கணும் ஆபீஸர்ஸ். ஆனாலும் இதுதான் என் கடைசிப் படம்னு நான் அறிவிச்ச மாதிரி, ‘இதுதான் எங்க கடைசி ரெய்டு’ன்னு அறிவிக்கணும் சரியா?” என்று அன்பு நிபந்தனை விதித்தார்.

“அதெல்லாம் எங்க கையிலயா இருக்கு?” என்று அமெரிக்கா(!) இருக்கும் திசைபக்கம் கைகாட்டிவிட்டு அமைதியாக நின்றனர் அமலாக்கத் துறையினர். அந்தக் காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்தபடி, “அடுத்து நாமதானோ?” என்று உறைந்துநின்றனர் அமைச்சர்கள்.

அதேநேரம் - ஆங்கே அதிமுக முகாமில் உற்சாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. மக்கள்(!) நலனை முன்னிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டுவந்த களிப்பில் இருந்தார் ஜெயக்குமார்.

“ஆளுநர் டெல்லி போறாரு… விடியா அரசுக்கு முடிவுகட்டப் போறாரு!”என்று ஜெயக்குமார் எடுத்துக்கொடுக்க, “ஆமா… ஆமா... ஆமா!” என்று ஆனந்தமாக ஆமோதித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

அவரைத் தன் அருகில் இழுத்த எடப்பாடி பழனிசாமி, “என்ன ஜெயக்குமார்! நான் 2024ல மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் வரும்னு சொல்லிட்டு இருந்தேன்… நீங்க என்னைவிட ஒரு ஸ்டெப் மேல போயிட்டீங்க போல?! என்கிட்ட சொல்லிக்காம கொல்லிக்காம டெல்லிகூட டீலிங் ஏதும் ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டார்.

“அட நீங்க வேற தலைவரே! அண்ணாமலையில ஆரம்பிச்சு அமித் ஷா வரை அதிமுகவை அப்பப்போ அசிங்கப்படுத்திப் பேசினாலும், ஆளுநர், அமலாக்கத் துறைன்னு அடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவி திமுக அரசைத் திக்குமுக்காடச் செய்றாங்கள்ல! இன்னும் ஒரே வருஷத்துல மு.க.ஸ்டாலின் தவிர மினிஸ்ட்ரில யாருமே மிச்சமிருக்க மாட்டாங்கன்னு அண்ணாமலை ஆரூடம் வேற சொல்லியிருக்கார். அப்புறம் என்ன... அடுத்து கோட்டையில அதிமுக கொடிதானே!” என்று வெள்ளந்தியாகச் சிரித்தார் ஜெயக்குமார்.

“நிலவரம் புரியாம பேசாதீங்க. நாடாளுமன்றத் தேர்தல்ல 40 தொகுதிகள்லயும் நாமதான் ஜெயிப்போம்னு சும்மாவா சொன்னேன்? வரலாறு முக்கியம் முன்னாள் அமைச்சரே! சரி இருக்கட்டும்... ஆளாளுக்கு எதையாச்சும் பேசிக்கிட்டே இருந்தாத்தான் தொண்டர்களும் துவண்டுபோகாம இருப்பாங்க. அடிச்சு விடுங்க… பார்க்க தமாசா இருக்கும்” என்று இடி இடியெனச் சிரித்தார் எடப்பாடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE