நான் ஏன் அப்படிப் பேசினேன் என்பதை அண்ணன் சீமான் புரிந்துகொள்ள வேண்டும்!

By என்.சுவாமிநாதன்

’’சீமான் தலைமையில் பயணித்தால் தமிழ்நாட்டுக்கு ஆபத்துதான். நாம் தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லை” என்றெல்லாம் பேசி வீடியோ வெளியிட்டு ஒரே நாளில் வைரலானவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மேரி ஆட்லின். இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கினார் சீமான்.

தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என தன்னிலை விளக்கம் தந்தபிறகும் சீமானின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. இப்படியான சூழலில் மேரி ஆட்லினிடம் காமதேனுவுக்காகப் பேசினோம். அடி மனத்து ஆதங்கங்களை படபடவென கொட்டினார்.

நாம் தமிழர் கட்சியில் உங்கள் இருப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக நான் தான் போட்டியிட்டேன். இது தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. இங்கு திராவிடக் கட்சிகள் கூட இதுவரை வென்றது இல்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசும் நாங்கள், அந்தத் தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் எடுத்தோம். அண்ணன் சீமானின் தலைமை அதற்குக் காரணம். அதேபோல் தொகுதிக்குள் அந்த அளவுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு நாம் தமிழர் உறவுகளோடு சேர்ந்து குரல்கொடுத்திருக்கிறேன்.

கட்சி தலைமை மீது இத்தனை பிடிப்பு இருந்தும் சீமானுக்கு எதிராக ஏன் இந்த திடீர் விமர்சனம்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொகுதி அளவில் நாம் தமிழர் கட்சிக்குள் சில பிரச்சினைகள் இருந்தன. அவற்றை சரிசெய்யும் நோக்கத்தில் இரு வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கட்சியின் மண்டல செயலாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. ஆனால் அங்கு, தொகுதிச் செயலாளரும், மண்டல செயலாளரும் மட்டுமே இருந்தனர். யார் மீது தவறு என குற்றஞ்சாட்டினோமோ அவர்கள் வரவில்லை. அதுமட்டுமில்லாது ரவுடிகளை வெளியில் இருந்து அழைத்துவந்து, இன்னொரு தரப்பினர் திடீர் தாக்குதலும் நடத்தினர். அதுதொடர்பாக காவல்துறையிலும் எஃப்.ஐ.ஆர் பதிவானது. இதில் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றும் அண்ணன்கள் இருவர் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர்களை சந்தித்து ஆறுதல் கூறத்தான் நான் சென்று இருந்தேன். தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பாசறை அணியில் உள்ளார். சீமான் அண்ணன் செல்லும் இடங்களில் பாதுகாப்புக்குச் செல்பவர் இவர். நான் சென்றபோது, அந்த அண்ணணின் அம்மா, “கட்சியில் இருந்து யாருமே வரவில்லையே” என அழுது ஒப்பாரி வைத்தார்.

அந்தத் தாயை ஆறுதல்படுத்தவும் கட்சிக்குள் நடப்பவற்றை தலைவர் சீமான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தான் நான் அந்த வீடியோவை வெளியிட்டேன். அதுவும் வெளியில் பகிரும் நோக்கத்தில் அதை எடுக்கவில்லை. அந்தத் தாய்க்கு அந்த நேர ரணத்திற்கு நம்மால் ஆன மருந்து என்னும் நிலையில் எடுக்கப்பட்டது அது.

தொடர்ச்சியாக நான் தமிழ் தேசியக் கருத்துக்களை பேசுவதாகச் சொல்லி என் முகநூல் பக்கத்தை பாஜகவினர் ரிப்போர்ட் அடித்ததால் அது ஏற்கெனவே முடக்கப்பட்டுவிட்டது. அப்படியான சூழலில் என்னோடு இருந்த உறவுகளில் சிலர், நான் பேசிய வீடியோவை அவசரப்பட்டு எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே அனுப்பிவிட்டனர். அவர் கட்சி மீது தனக்கு இருந்த கருத்துவேறுபாட்டால் அதை திமுக குழுக்களுக்கும் வாட்ஸ் அப் வழியே அனுப்பிவிட்டார்.

உண்மையில் ஒரு தாயின் ஆதங்கத்தை சமாதானம் செய்ய முயன்ற நான் இதில் பலிகடா ஆகிவிட்டேன். இந்த நொடிவரை உங்களிடம் அதை பகிர்ந்தவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தலைவரிடம் அதை கூறிவிட்டேன். உள்கட்சி விவகாரம், கட்சிக்குள் விவாதிக்க வேண்டியது என்னும் நிலையில் இதில் விளையாடியவர்களின் பெயர்களை இங்கே சொல்லவில்லை.

களப்பணியில் மேரி ஆட்லி

உங்களை கட்சியிலிருந்தே நீக்கிவிட்டாரே சீமான்..?

ஆம்! ஆனாலும் நான் உயிரோடு இருக்கும்வரை நாம் தமிழரில் தான் பயணிப்பேன். எனக்கு தமிழ் தேசியக் கொள்கை தாண்டி வேறு எதுவும் தெரியாது. தொடர்ந்து கட்சிக்காகவே களமாடிவந்தேன். என் தொகுதி மக்களின் நம்பிக்கையையும் நான் பெற்றதால் தான் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புக் கொடுத்தார் தலைவர். நான் அந்த வீடியோவில், அந்தத் தாயை சமாதானப்படுத்தும் நோக்கத்தில், “சீமான் என்று ஒரு நபர்” எனும் தொனியில் பேசிவிட்டேன். அது தவறு. அந்த தவறும் அப்படிப்பேச வேண்டிய சூழல் எழுந்தது குறித்தும் சீமான் அண்ணனுக்கு, அவரது வாட்ஸ் அப் வழியே என் விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன்.

சீமான்

அப்படியானால் நாம் தமிழர் கட்சியிலும் தொண்டனுக்கும் தலைமைக்கும் இடையில் இடைவெளி இருக்கிறதுதானே..?

ஒருகட்சி வளர்கின்றபோது இப்படியான சிக்கல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். நிர்வாகிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளைக் களையத்தான் மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள், கலந்தாய்வு அமர்வுகள் எல்லாம் நடக்கிறது. ஆனால் ஏற்கெனவே கட்சியில் நிர்வாகிகளாக இருப்பவர்களில் சிலருக்கு, அடுத்த நிலையில் களத்தில் இருந்து உழைப்பவர்கள் சீமான் அண்ணன் மனதில் இடம்பிடித்து விடக்கூடாது என்ற போட்டி அரசியலும், விரோதமும் இருக்கிறது. அப்படி சில குழுக்களால் தான் குமரியிலும் பிரச்சினை.

சீமான் அண்ணன் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி அளவில் அண்ணனை மட்டுமே மனதில் ஏற்றிக்கொண்டு பணிசெய்வோருக்கும் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களது உழைப்பும், தியாகமும் தலைமைக்குத் தெரியும். குறுக்கே நின்றுகொண்டு மாவட்டம், தொகுதி அளவில் பொறுப்பில் இருப்போர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். எங்களைப் போன்ற களப்பணியாளர்களை அவர்கள் ஒடுக்குகிறார்கள். எங்களின் குரல் அண்ணனுக்கு எட்டக்கூடாது என்பதிலும் முனைப்பாக இருக்கிறார்கள்.

அப்படி என்றால் திராவிடக் கட்சிகளின் கலாச்சாரம் தானே இங்கேயும் இருக்கிறது?

ஒருசிலர் தான் அப்படி இருக்கிறார்கள். அண்ணன், அவர்களை விரைவில் அடையாளம் காண்பார். அதுமட்டும் இல்லாமல் நாங்கள் ஒன்றும் திராவிடக் கட்சிகளைப் போல பணத்தைக் கொடுத்து ஓட்டு கேட்கவில்லையே! தமிழ் தேசியம் பேசும் அண்ணனை மூச்சாகக் கொண்டுதானே களத்தில் நிற்கிறோம். அதனால் எங்களை திராவிடக் கட்சிகளோடு ஒப்பிடுவது அபத்தம்.

மன்னிப்பு, வருத்தமெல்லாம் தெரிவித்தும் தலைமை உங்களைக் கண்டுகொள்ளவில்லையே..?

தலைவர் மீண்டும் ஒரு வாய்ப்பளித்தால் களமாடுவேன். இல்லாவிட்டாலும் தமிழ் தேசியம் தான் பேசுவேன். ஒரு பேச்சாளராக, செயல்பாட்டாளராக நாம் தமிழரின் வளர்ச்சிக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்து உழைத்துக்கொண்டு தான் இருப்பேன். நான் திருமணம் முடிந்து விவாகரத்து ஆனவள். எனக்கு 5 வயதில் குழந்தை இருக்கிறது. என் பெற்றோர் வயதானவர்கள். திமுகவினர் என் அப்பாவிடம், “மகளை எங்கள் கட்சியில் சேரச் சொல்லுங்கள். முக்கிய பொறுப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் சொல்கிறார்கள்.

என் மகனையும் மடியில் சுமந்துகொண்டு மக்கள் பிரச்சினைகளுக்கு வீதி, வீதியாக அலைந்தவள் நான். அந்தவகையில் அண்ணன் சீமான் என்னை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் மீட்சியைக் கொண்டுவர சீமானால் தான் முடியும் என மேடை தோறும் முழங்கியவள் நான். என் தவறுகளை மன்னித்து மீண்டும் நாம் தமிழர் உறவாய் பயணிக்க அண்ணன் சீமான் சம்மதிப்பார் எனக் காத்திருக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE