சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து: 18 பேர் காயம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: கந்தர்வக்கோட்டை பகுதியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, மஞ்சபேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இன்று பாதயாத்திரை புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் 8 வயது சிறுவன் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 18 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த மாலா மற்றும் மகமாயி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இதே பகுதியில் கடந்த மாதம் 17-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் கோயிலுக்குச் சென்ற போது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE