பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால், வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மானநஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள தனக்கு பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை எனவும், அனைத்து சட்ட நடைமுறையையும் பின்பற்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை நாளைக்கு தள்ளி வைத்தார்
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!