திருமாவளவன் குறித்து ஆபாச பதிவு: நாதக லண்டன் தம்பதி மீது வழக்குப் பதிவு

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து எக்ஸ் பக்கத்தில் ஆபாச பதிவிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த லண்டன் தம்பதி மீது 5 பிரிவுகளின் கீழ் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி கரூர் மண்டலச் செயலாளர் விசிக செயலாளர் ஏ.கே.தமிழாதன் (என்ற) கமலதுரை என்பவர் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் அளித்த புகாரில் கூறியது: “நான், இன்று (ஆக.23) எக்ஸ் வலைதளத்தை பார்த்தபோது, காலின்ராய் (colinRoy (@Roykuma90313394) என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவனை குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளில் பதிவிட்டுள்ளார்.

அந்த எக்ஸ் பக்கம் குறித்து விசாரித்தபோது, சென்னை அண்ணாநகர், வசந்தம் காலனியில் வசிக்கும் நாதக கட்சியைச் சேர்ந்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திபிரியா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் எக்ஸ் பக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிடுவதுடன், தொல்.திருமாவளவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என அறிந்தும் இழிவுப்படுத்தி உள்ளனர்.

மேலும், விசிகவைச் சேர்ந்த ஸ்நேகா என்ற பெண்ணையும், மற்றொரு பெண்ணையும் இழிவுப்படுத்தும் விதமாக திருமாவளவன் மற்றும் சிலருடன் ஒரு பெண் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ஆபாசகமாக, அருவெறுக்கத்தக்க வகையில் பதிவிட்டுள்ளனர். இத்தகைய பதிவுகளை பதிவிடுவதன் மூலம் விசிகவுக்கும் மற்றவர்களுக்கும் பகையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, பொது அமைதியை குலைக்கும் செயலை கனடா நாட்டிலிருந்து கொண்டு செல்வகாந்தன், சாந்திபிரியா ஆகிய இருவரும் செய்து வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த சாந்திப்பிரியாவுக்கு போலியாக இந்தியா பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்து, அவரை கனடா நாட்டுக்கு சட்டத்துக்கு புறம்பாக செல்வகாந்தன் அனுப்பி உள்ளார். உள்நோக்கத்துடன் திருமாவளவன் மற்றம் விசிகவினரை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வரும் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் ரூபி இது தொடர்பாக செல்வகாந்தன், சாந்திபிரியா ஆகிய இருவர் மீதும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE