கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து உட்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, சிவராமனின் தந்தை அசோக்குமார் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினத்தில் இருந்து திம்மாபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன், அவரது தந்தை இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது..
சிவராமன் மரணமும், இபிஎஸ் கேள்விகளும்: “இந்த இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
» “அரசியல் காழ்ப்புக்காக நலத் திட்டங்களைத் தடுக்காதீர்!” - முன்னாள் எம்.பி-க்கு வானதி கண்டனம்
» வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? - கதிர் ஆனந்த் எம்.பி தகவல்
சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை: “கால் உடைந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவராமனுக்கு, ஐந்து நாட்களாக உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா? கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுவடைகிறது,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு: கிருஷ்ணகிரி இவிவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி. சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார்.
அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும், என தெரிவித்தனர். அதையடுத்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் இது தொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அழைப்பு: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
100 நாள் வேலை திட்டம்: கார்கே கவலை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போதைய அவலநிலை பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவுக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை : பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை அடுத்து அனில் அம்பானி, மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. மேலும், இதற்காக அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது.
உக்ரைன் குழந்தைகளின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி: பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, ஜெலன்ஸ்கி, மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருவரும் தியாகிகள் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். ஜெலன்ஸ்கின் தோல்களில் கைகளைப் போட்டவாறு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் பயணம் மேற்கொண்டபிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் சந்தித்தார். மரின்ஸ்கி அரண்மனைக்கு வந்த பிரதமரை, அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தனர், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு தலைவர்களின் முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் தூதுக் குழுக்களுடனும் உரையாடினர். அப்போது பேசிய நரேந்திர மோடி, "பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது" என தெரிவித்தார்.
நேபாளத்தில் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: நேபாளத்தில் 40 பயணிகளுடன் சென்ற இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது.