“அரசியல் காழ்ப்புக்காக நலத் திட்டங்களைத் தடுக்காதீர்!” - முன்னாள் எம்.பி-க்கு வானதி கண்டனம்

By இல.ராஜகோபால்

கோவை: அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தமிழக மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்களைத் தடுக்க நினைக்காதீர்கள் என முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜனுக்கு, வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும், அவர்களுக்கு தடையற்ற தரமான சேவைகள் கிடைக்கும் வகையிலும், அரசு, தனியார் கூட்டு முயற்சியின் அடிப்படையில் கோவை விமான நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

இம்முயற்சியில் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்படும் என்பதையும், மத்திய அரசு விமான நிலையங்களை தனியாருக்கு மொத்தமாக ‘பட்டா’ போட்டு விற்று விடவில்லை என்பதையும் கோவை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அரசு, தனியார் இணைந்து விமான நிலையங்கள் உருவாவது இது முதன்முறையல்ல.

1994ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதே, முதன் முறையாக அரசு, தனியார் கூட்டாண்மை மூலம் கேரளாவில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கான ஏலத்தில் கேரளா அரசு தோற்றதும், அதனால் விமான நிலைய ஒதுக்கீட்டுக்கு கேரளா அரசு உரிமை கோர முடியாது எனவும் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது அனைவரும் அறிந்ததே.

இந்திய விமான நிலைய ஆணையமானது, கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இதர பணிகளுக்கு ரூ.1,300 கோடிக்கு மேல் செலவிட தயாராக உள்ள நிலையில், அதன்மூலம் தமிழக மக்களுக்கு கிடைக்கப் போகும் நற்பயன்களை மனதில் கொண்டே நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலத்தை நிபந்தனைகளின்றி மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். கூட்டணிக் கட்சியின் முதல்வர் முடிவையே எதிர்ப்பதன் நோக்கம் என்ன.

தமிழக முதல்வருடனான தனது சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை நான் எடுத்துரைத்துள்ள நிலையில், தனது தொகுதி மக்களுக்காக தான் ஒன்றுமே கேட்கவில்லை என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ள என்னைக் குறைகூறும் முன், கோவை மக்கள் பெற்ற நலத்திட்டங்களை முன்னாள் எம்.பி. நடராஜன் பட்டியலிட வேண்டும். அரசியல் நாகரிகமற்ற வசவுகளை, ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி உதிர்ப்பது உண்மையில் வருத்தமளிப்பது மட்டுமன்றி, கண்டிக்கத்தக்கதும் கூட" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE