வேலூர்: இந்தியாவில் விரைவில் திறக்கப்பட உள்ள விமான நிலையங்களில் வேலூருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விரைவில் வேலூர் விமான நிலையத்தை ஆய்வு செய்வதற்காக வரவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கூறினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரயில்வே திட்டப் பணிகள் மற்றும் இருப்புப் பாதை தொடர்பாக நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (ஆக.23) நடைபெற்றது. கூட்டத்துக்கு, வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, தெற்கு ரயில்வே துணை முதன்மை செயற்பொறியாளர் அருண், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கதிர் ஆனந்த் கூறும்போது, "விழுப்புரம் - திருப்பதி இடையிலான ரயில் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்கும் திட்டம் குறித்தும் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்காக வேலூர் வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே நிலங்களில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்திட ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
» 'கால்நடைகளுக்கு தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிறோம்’ - திருப்பூர் ஆட்சியரிடம் விவசாயிகள் குமுறல்
» கிருஷ்ணகிரி சிவராமன் மரணம் தற்கொலைதான்; சந்தேகம் இல்லை - சீமான் திட்டவட்டம்
அதேசமயம், அனைத்து குடும்பங்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனவே, அந்த பகுதி மக்களுக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் பெற்றுத்தரவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் வசந்தபுரம் பகுதியில் லெவல் கிராஸிங் கேட்டை மூடிவிட்டு மேம்பாலம் கட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் இடையூறுகளை கவனத்தில் கொண்டு லெவல் கிராஸிங்கை மூடாமல் மேம்பாலம் கட்டவும், அங்கேயே லிஃப்ட் வசதியுடன் கூடிய நடைப்பாதை கட்டவும், இருசக்கர வாகனங்கள் சென்றுவர தனியாக இணைப்புச் சாலை அமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காட்பாடி முதல் வளத்தூர் வரை உள்ள ரயில்வே லெவல் கிராஸிங் பகுதிகளில் எங்கெங்கு ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாலம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யும்படி ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் இரண்டாவது ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். வாணியம்பாடி லெவல் கிராஸிங் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு பெரிய அளவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டியுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் நிதி செலவிட வேண்டியுள்ளது. திட்ட மதிப்பீடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை கைவிடுவதென முடிவாகியுள்ளது. அங்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து வாகனங்கள் சென்று வரும் வகையில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரம் என்றளவில் இரண்டு சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வரும் வகையில் இருக்கும்.
அதேபோல், ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். அதேசமயம், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விரைவில் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்தியாவில் திறக்கப்படும் நிலையில் உள்ள விமான நிலையங்களில் முதலாவதாக வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்று கதிர் ஆனந்த் கூறினார்.