'கால்நடைகளுக்கு தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிறோம்’ - திருப்பூர் ஆட்சியரிடம் விவசாயிகள் குமுறல்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று நடந்ததில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசினர்.

இது தொடர்பாக நடந்த விவாதம் வருமாறு - மனோகரன்: "தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதிக தொலைவில் கொப்பரை நிலையங்கள் அமைத்தால், விவசாயிகளுக்கு பயன் தராது. கொப்பரை கொள்முதல் நிலையத்தை பெதப்பம்பட்டியில் அமைக்க வேண்டும்" என்றார்.

காளிமுத்து: "தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சிறப்பாக பெய்துள்ளது. ஆனால், உப்பாறு அணைக்கு நாங்கள் உயிர் தண்ணீர் கேட்டு கொண்டிருக்கிறோம். பிஏபியில் உபரி நீர் திறந்துவிடும் சூழலில் கூட, தங்கள் பகுதியில் போதிய மழையின்றி ஆடு, மாடுகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

போர்க்கால அடிப்படையில் உயிர்த் தண்ணீர் வழங்க வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை போன்று, உப்பாறு அணைக்கு உயிர்த்தண்ணீர் பெற குழாய் மூலம் அரசூரில் இருந்து தண்ணீர் வழங்கினால், எங்கள் பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும், கால்நடைகளும் பயன்பெறும்" என்றார்.

ஈஸ்வரமூத்தி: "தாராபுரம், அலங்கியம், கொளிஞ்சிவாடி, தளவாய்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 8,500 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இவற்றுக்கு பழைய அமராவதி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறப்படுகிறது. இந்த வாய்க்கால்கள் ஆண்டுதோறும் சீரமைக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் போதிய பணிகளை முன்கூட்டியே செய்யாததால், முறையாக பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

முழுமையாக தூர்வார ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மண்ணைக் காப்பாற்ற, மண்ணுயிர்களை காப்பாற்ற தற்பைப்புல்லை மானிய விலையில் அரசு வழங்குகிறது. ஆனால், தாராபுரத்துக்கு இதுவரை அது கிடைக்கவில்லை. உரிய நேரத்தில் கிடைக்காவிட்டால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது" என்றார்.

வேலுச்சாமி: "பிஏபியில் பொங்கலூர், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களின் ஹாட் ஸ்பாட்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி மற்றும் கேமரா பொருத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக பேசி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுத்தபாடில்லை" என்றார்.

எஸ்.ஆர்.மதுசூதனன்: "கடந்த 15 நாட்களாக காய்கறிகளுக்கு உரிய விலை இல்லை. குறிப்பாக, பந்தல் காய்கறிகளுக்கு விலை குறைந்துள்ளது. விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டால், மீண்டும் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனை வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக உரிய விவசாயம் இல்லை.

1,000 ஏக்கரில் ஆண்டு தோறும் மலை கிராம மக்கள், மொச்சை சாகுபடி செய்வார்கள். நடப்பாண்டில் அவர்கள் இதனை உடனே தொடங்க வேண்டும். அதற்கான விதைகளை உடனடியாக தாமதம் இன்றி வழங்க வேண்டும். உயிர் உரங்கள் காலாவதியானதை வழங்கக்கூடாது. அரசு ஊழியரின் குடும்பத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், கிணறு வெட்ட மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஆர்.குமார்: "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை கடந்த 17ம் தேதி முதல்வர் துவங்கி வைத்தார். அதில் பல்வேறு இடங்களில் குழாய்கள் மற்றும் வால்வுகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை மற்றும் அதிகாரிகளின் எண்களை எழுதி வைக்க வேண்டும். இதனால் உரிய நேரத்தில் தகவல் சொல்லப்படும். சேதம் ஏற்படும் இடங்களில் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வெளியேறுவதால் சாலையில் விபத்து ஏற்படும் சூழலை சந்திக்க வேண்டி உள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE