மதுரையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட மறுவாழ்வு ஓய்வூதியம் நிறுத்தம்: மீண்டும் வழங்க கோரிக்கை

By என்.சன்னாசி

மதுரை: 49 பயனாளிகளுக்கு வழங்கிய வன்கொடுமை தடுப்புச் சட்ட மறுவாழ்வு ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அந்தப் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் கருப்பையா என்பவர் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: 'தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள், பட்டியல் அல்லாத சாதியினரால் படுகொலை செய்யப்படும் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இச்சட்டத்தின் அடிப்படையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு மறுவாழ்வு திட்டத்தின் மூலம் மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 2024 பிப்ரவரி 2ம் தேதி வரை 42 வழக்குகள் அடிப்படையில் 49 நபர்களுக்கு மாதம் ஓய்வூதியமாக தலா ரூ.13,200 வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலரின் செயல்முறை கடிதத்தின்படி, 49 பேருக்கும் ரூ.7,500 மாத ஓய்வூதியமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை. ஆனாலும், குறைக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,500-ஐ கடந்த 6 மாதமாக வழங்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்து சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்திலும் நிறுத்தப்பட்டுள்ள 6 மாத நிலுவை ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். தொடர்ந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமிழக முதல்வருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார்கள் அனுப்பிய நிலையில், இது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கருப்பையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE