கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை காத்திடுக: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை காக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளரிடம் பேசிய அவர்: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் என்ற பெயரில் மாணவி பலாத்கார செய்த சம்பவம் மற்றும் பல மாணவியருக்கு பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டிக்கிறோம்.

விதிமுறைகளை மீறி ஒரு தனியார் பள்ளியில், 5 நாட்கள் முகாம் என்கிற பெயரில் மாணவியர் தங்க வைக்கப்பட்டது ஏன்? இதுபோன்று ஒரு பள்ளியில் நடந்ததா அல்லது பல பள்ளிகளில் நடந்ததா? இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கு தெரியாதது ஏன் என்கிற பல்வேறு சந்தேங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் 19ம் தேதி கைது செய்யப்பட்ட சிவராமன், தற்போது இறந்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். சிவராமன் தந்தையும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறுகின்றனர். எனவே, இவ்வழக்கு குறித்து முறையாக சிபிசிஐடி விசாரணை நடத்தினால், பல்வேறு சந்தேங்களுக்கு விடை கிடைக்கும். தனியார் பள்ளிகளில் தொடர்பு இல்லாத அமைப்புகள் இதுபோன்ற பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு குழு விசாரணையை தீவிரப்படுத்தி தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதை, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிக்கவுள்ளோம். குறிப்பாக, சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை காக்க வேண்டும். அரசியல் பின்புல தொடர்பு இல்லாமல் இது போன்ற குற்றங்கள் நடக்காது.

வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாக கூறி, அப்பகுதியை சுற்றியுள்ள, 164 கிராம மக்களுக்கு வனத்துறையினர் தொடர் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். தமிழக அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் இதுபோல சில இடைஞ்சல்களும் வருகிறது. இதையெல்லாம் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE