சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

By காமதேனு

சென்னையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுக பிரமுகர்கள், திமுக சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளிட்டவர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் வழிகள் கண்டறியப்பட்டு அதனை அடைக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கைகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் நேற்று கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று அமலாக்கத்துறை சோதனை நடந்த செந்தில் பாலாஜி வீடு

சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கே.கே.நகர் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வீடு போன்ற இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்கான அடிப்படை காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் வரையிலும் இந்த சோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் என்பதாக கூறப்படுகிறது. தினசரி வெயில் நிலவரம் அறிவிப்பது போல அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறும் இடங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என வேடிக்கையாக கருத்துகள் பகிரப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE