அரியலூர்: விவசாயப் பணிகள் நடக்கும் காலகட்டத்தில் 100 நாள் வேலை வழங்கக் கூடாது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் இன்று (ஆக.23) நடைபெற்றது.
கூட்டத்தில், பங்கேற்று பேசிய விவசாயிகள், ''இயற்கை விவசாய சங்கத் தலைவர் கோ.விஜயகுமார்- அரியலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டிங் கமிட்டியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'இ-நாம்' ( E-Nam) திட்டத்தை அமல்படுத்தி, விவசாயிகள் விலைப் பொருள்களை விவசாயிகள் தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப் படுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் வனவிலங்குகளான காட்டுப் பன்றி, மயில் பெருத்த சேதம் ஏற்படுத்துகிறது.
இதனை வனத்துறை மூலம் கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள நிலையில், படைபுழுவைக் கட்டுபடுத்த ஊடுபயிராக பயறு வகைகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அதிகப்பட்சமாக 5 ஏக்கர் வரை ரூ.7,000 வரை ஊக்கத் தொகையாக வழங்கிட வேளாண் துறைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
» நெல்லை, குமரியில் மழை: குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
» ஏற்காட்டில் தொடரும் கனமழை: குப்பனூர் சாலையில் 3 இடங்களில் மண் சரிவு
மருதையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீமைக்கருவேலச் செடிகளை அகற்றவேண்டும். பாலசிங்கம்-செந்துறையில் உள்ள பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். துளார் பெரிய ஏரியில் வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஆங்காங்கே பள்ளம் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும்.
செந்துறை, ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் 1000-த்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும். தனியார் சிமென்ட் ஆலைகள் அதிகப்படியான ஆழத்தில் மண் அள்ளுகின்றனர். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். செங்கமுத்து - விவசாயப் பணிகள் நடக்கும் காலகட்டத்தில் 100 நாள் வேலை வழங்கக் கூடாது.
வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் வழங்கியவர்களுக்கே வழங்காமல் புதிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பால் கறவை பணம் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்குவதை மாதம் ஒருமுறை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி உரிய பதிலளித்தார்.